மதுரை மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் இன்று (14.11.2024)   மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள்,  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடாமி கட்டிடம் கட்டும் பணியினை தொடங்கி வைத்தார்.

        தொடர்ந்து,  மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் தெரிவித்ததாவது:-

          உலகளவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை மதுரை மாவட்டத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் சிறந்து விளங்குகிறது.  இதற்கு காரணம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எல்லா வகையிலும் உற்றதுணையாக இருந்து வருகிறார்கள். மேலும், மதுரை மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டங்களை மதுரை மாவட்ட மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

          மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் உயர்திறன் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் பதக்க மேடையை அடைவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் கொண்ட ஒலிம்பிக் அகாடமி சென்னை, திருச்சி, மதுரை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2024-2025-ஆம் ஆண்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான அறிவிப்பில், மதுரை மாவட்டத்தில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 11.11.2024-அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ஒலிம்பிக் அகாடாமி கட்டிடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் கபாடி மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடமி கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

          இந்த  ஒலிம்பிக் அகாடமி கட்டிடமானது தரை தளத்தில் ஒரு கபடி ஆடுகளம், முதல் தளத்தில் 6 எண்ணிக்கை கொண்ட டேபிள் டென்னிஸ் ஆடுகளம் கொண்ட 250 இருக்கைகளுடன் கூடிய உள்விளையாட்டரங்கம் மற்றும் ஆண்,பெண் உடை மாற்றும் வசதியுடன் கூடிய அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படும். மேலும், நவீன வசதிகளுடன் கொண்ட புதிய உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும். தற்போது உள்ள திறந்தவெளி கூடைப்பந்து ஆடுகளம் செயற்கை தரையமைப்பு, பார்வையாளர் இருக்கைகளுடன் கூடிய புதிய கூடைப்பந்து ஆடுகளமாகவும், திறந்தவெளி டென்னிஸ் ஆடுகளம் செயற்கை தரையமைப்பு பார்வையாளர் இருக்கைகளுடன் கூடிய புதிய டென்னிஸ் ஆடுகளமாகவும்   புனரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் தெரிவித்தார்.

          இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள்,  மாநகராட்சி மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள்,  மண்டல முதுநிலை மேலாளர் திரு.பி.வேல்முருகன் அவர்கள்,  சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.வெங்கடேசன் அவர்கள், மாநகராட்சி மண்டலத் தலைவர் திருமதி.சரவண புவனேஷ்வரி அவர்கள்,  மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முனைவர்.க.ராஜா அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.